Home மாவட்டங்கள் சென்னை சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு

சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு

சென்னை: அக். 1-
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரே மாதத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை 605 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் 1,290 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த இரு மாதங்களாக காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் மழையும், பின்னர் நிலவும் வெயிலும் மாறி மாறி காணப்படுவதால் பருவகால நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் டெங்கு பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காய்ச்சல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, நான்கு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வீடுகளைச் சுற்றி அசுத்த நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணித்து சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான காய்ச்சல், கண்கள் அல்லது கண்களின் பின்புறத்தில் வலி, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி, தோலில் சிவப்பு தடிப்புகள், குமட்டல், வாந்தி, பசியின்மை ஆகியவை டெங்கு அறிகுறிகளாக இருக்கலாம். கடுமையான வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி, ஈறு அல்லது மூக்கில் ரத்தம், வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் காணப்பட்டால் தாமதமின்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தமிழக சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.