Home மாவட்டங்கள் சென்னை சென்னையில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல்; 2 பேர் கைது

சென்னையில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல்; 2 பேர் கைது

சென்னை: நவ. 19-
தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாதவரம் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.140 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து ஹெராயின் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், மாதவரம் ரவுண்டானா பகுதியில் டிஆர்ஐ அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதைக் கடத்தி வந்ததாகக் கூறப்படும் 2 பேரைக் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் தரத்தைப் பொறுத்து, ஒரு கிலோவின் மதிப்பு ரூ.2 கோடி முதல் ரூ.7 கோடி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், 70 கிலோ போதைப்பொருளின் மதிப்பு ரூ.150 கோடி முதல் ரூ.300 கோடி வரை இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட 2 பேரையும் அதிகாரிகள் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த விலை உயர்ந்த போதைப்பொருளை தமிழகத்துக்கு எந்த மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.