
சூரத்: நவ. 19-
குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், சகல வசதிகளையும் கைவிட்டு சமணத் துறவறம் ஏற்க உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஸ்வந்த்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப் பாய் போகர் (47). இளம் வயதில் பிழைப்புக்காக குஜராத் மாநிலம் சூரத்துக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு சிறிய ஜவுளிக் கடையுடன் தொழிலைத் தொடங்கினார்.
கடின உழைப்பால் தனது தொழிலை விரிவுபடுத்திய திலீப் பாய், தற்போது 3 கடைகள் மற்றும் பல இயந்திரங்களுடன் ஆண்டுக்கு சுமார் ரூ.15 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்தார். இதற்கிடையே, சமணமதத் தலைவர் ஒருவரை அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்பு திலீப் பாய்க்கு சமண சமயத்தின் மீதான ஆர்வத்தை மேலும் ஆழப்படுத்தியது. அவரது மனைவி மற்றும் 3 மகள்களுக்கும் சமண சமயத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு, திலீப் பாயின் மூத்த மகள் ஷைலி சமணத் துறவறம் ஏற்று, ‘சாத்வி தர்ஷிதா’ என்ற பெயரைப் பெற்றார்.
மகளின் இந்த முடிவு குடும்பத்தினரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து திலீப் பாய் தனது ஜவுளித் தொழிலைக் கைவிடத் தொடங்கியதுடன், சமணத் துறவறம் ஏற்கவும் தயாரானார். அவருடன் அவரது மனைவி ஜோதி பென் (45), இளைய மகள்களான சவி (22), சார்வி (14) ஆகியோரும் துறவறம் ஏற்க முடிவு செய்தனர். கிராபிக் டிசைனில் பி.பி.ஏ. பட்டம் பெற்று,
கைவினைப் பொருள் தொழில் செய்து வந்த சவி, அந்தத் தொழிலைக் கைவிட்டார். மாவட்ட அளவிலான கால்பந்து வீராங்கனையான சார்வி, 9-ம் வகுப்புப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
தற்போது 4 பேரும் சமணத் துறவிகளுடன் தங்கி, கடுமையான துறவற வாழ்க்கைக்குத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். காலணி அணியாமல் வெறுங்காலுடன் நடப்பது, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, 2027-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி சூரத்தில் நடைபெறும் விழாவில் 4 பேரும் முறைப்படி சமணத் துறவறம் ஏற்க உள்ளனர்.














