
ஜம்மு: ஜூலை 14 –
தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., முயற்சிப்பதாக, அக்கட்சி தலைவரும் ஜம்மு – காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோராவிட்டால், 100 கோடி ரூபாய் கேட்டு அவதுாறு வழக்கு தொடரப்படும் என, பா.ஜ., எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஸ்ரீநகரின் ஹஸ்ரத்பாலில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஒமர் அப்துல்லா பேசுகையில், தன் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, அரசை கவிழ்க்க பா.ஜ., முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இதற்காக, தங்கள் கட்சி எம்.எல்.ஏ., ஒருவரை பா.ஜ., நிர்வாகி அணுகி, 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும், அமைச்சர் பதவி உள்ளிட்டவை பெற்று தருவதாக உறுதி அளித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
எனினும், ‘இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யான வை; ஆதாரமற்றவை’ என பா.ஜ., மறுத்துள்ளது. இது, தங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவை என குறிப்பிட்டு, ஒமர் அப்துல்லாவுக்கு அக்கட்சி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ஜ.,வின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத் தலைவர் சத்பால் சர்மாவின் அறிவுறுத்தலின்படி அனுப்பப்பட்ட நோட்டீஸ்:
ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் கருத்துகள் அவதுாறு விளைவிப்பவை; எனவே, தன் குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக அவர் திரும்பப் பெற வேண்டும். அத்துடன் ஏழு நாட்களுக்குள் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ், 100 கோடி ரூபாய் அவதுாறு வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.














