Home மாவட்டங்கள் சென்னை ஜெம் வீரமணி வழக்கில் 3 கார் ஓட்டுநர்கள் கைது

ஜெம் வீரமணி வழக்கில் 3 கார் ஓட்டுநர்கள் கைது

சென்னை, அக். 6-
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மனும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். வீரமணியின் நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றிய கணேசனும் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே ஜெம் வீரமணி மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு கடந்த 2-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர் விசாரணையில், வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அவரது கார் ஓட்டுநர்களான லாசர், பார்த்திபன், பாபு ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். லாசர், வீரமணியிடம் 23 ஆண்டுகளாகவும், பாபு மற்றும் பார்த்திபன் தலா 8 ஆண்டுகளாகவும் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 8 செல்போன்கள் மற்றும் 55 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.