
பெங்களூரு: ஜூன் 3-
கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று மாலை பதவி ஏற்கிறார் இதை முன்னிட்டு பெங்களூர் நகரம் விழா கோலம் கொண்டள்ளது.
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று முறைப்படி பதவி ஏற்றுக் கொள்கிறார். மாநிலத்தின் 24-வது முதல்-மந்திரியாகப் பொறுப்பேற்கும் அவரது புதிய ஆட்சி இன்று முதல் உதயமாகிறது.
இன்று மாலை 4.05 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
பெங்களூருவில் உள்ள லோக பவனில் அதாவது கவர்னர் மாளிகையில் இன்று மாலை 4 மணி 5 நிமிடத்திற்கு, ‘துலா’ லக்னத்தில் சுப முகூர்த்த வேளையில் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.
அவருடன் சேர்த்து முதற்கட்டமாக 13 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். மூத்த தலைவர்களான டாக்டர் ஜி.பரமேஸ்வர், ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், யு.டி.காதர், எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் கந்த்ரே, கே.எச்.முனியப்பா, சதீஷ் ஜாரகிஹோலி, பிரியங்க் கார்கே, கிருஷ்ண பைரேகவுடா, டாக்டர் சரண பிரகாஷ் பாட்டீல், லட்சுமி ஹெப்பால்கர், யதீந்திர சித்தராமையா, பைரதி சுரேஷ் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். புதிய முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
லோக பவனில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் இந்த விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும், புதிய முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் லோக பவனில் இருந்து விதான் சவுதா (சட்டசபை) வரை திறந்த ஜீப்பில் ஊர்வலமாகச் செல்கிறார். பின்னர் சட்டசபையில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்குச் சென்று, முறைப்படி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுகிறார்.
டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பதையொட்டி பெங்களூரு நகரம் முழுவதும், குறிப்பாக லோக பவன், விதான் சவுதா, மெஜஸ்டிக், சிவாஜி நகர், மல்லேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரம்மாண்ட கட்-அவுட்டுகள், பேனர்கள் மற்றும் ஃபிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நகர் எங்கும் காங்கிரஸ் கொடிகள் பறப்பதால் பெங்களூரு மாநகரமே காங்கிரஸ் மயமாகக் காட்சியளிக்கிறது
விழாவையொட்டி லோக பவன் மற்றும் விதான் சவுதா சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் விழாவைக் காணும் வகையில் விதான் சவுதா சாலையில் ஆங்காங்கே பிரம்மாண்ட எல்.இ.டி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


















