
சென்னை: அக். 10-
டெல்லியில் அரங்கேறும் காட்சிகள் நெருக்கடி நிலையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்பட்டதாகவும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று பிரமாண்டப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வன்முறை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் இன்று அரங்கேறும் காட்சிகளும், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையும், தான் வாழ்ந்த நெருக்கடி நிலையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். டெல்லியிலும் நாடு முழுவதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள தவெக அரசு, பா.ஜ.க.வின் நீட்சியாகச் செயல்பட்டு, போராடும் மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அமைதியான முறையில் தங்களின் ஜனநாயக உரிமையான போராட்டத்தை நடத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கருத்து வேறுபாடு குற்றமல்ல. ஜனநாயகத்தைப் பாதுகாக்க எழுபவர்களை அமைதியாக்குவதன் மூலம் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்பது பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத கோரிக்கை என்றும், அவரது ராஜினாமாவைத் தாண்டி தேர்தல் ஆணையத்தின் நிறுவனக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சேதங்களும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.















