
புதுடெல்லி: அக். 31-
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலயத்தில் (என்சிஆர்) காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், நவம்பர் 5 முதல் 20-ம் தேதி வரை கடுமையான தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை காற்றுத் தர மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ளது.
அதன்படி, டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், காசியாபாத், கௌதம் புத்த நகர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் புழுதியை ஏற்படுத்தும் இடிப்புப் பணிகள் மற்றும் வெளிப்புறக் கட்டுமானப் பணிகளுக்கு 16 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் மின்கம்பி வழித்தடங்கள் அமைக்கும் பணிகளும் இந்தத் தடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேவேளை, ரயில்வே பணிகள், மெட்ரோ சேவைகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவுப் பணிகள், தேசிய பாதுகாப்பு சார்ந்த பணிகள், முக்கியமான தேசியத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுடன் தொடர்புடைய பணிகள் பாதிக்கப்படாத வகையில் இந்த விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2018 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காற்றுத் தரத் தரவுகளின் அடிப்படையில், நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலும் நடுப்பகுதியிலும் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டும் என தெரியவந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், நச்சுப் புகை மற்றும் காற்றில் கலக்கும் நுண்துகள்கள் பரவாமல் தரைப்பகுதியிலேயே தேங்குகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, காற்று மாசு உச்சத்தை எட்டும் காலத்தைத் தவிர்க்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இந்தத் தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.













