Home செய்திகள் தேசிய செய்திகள் படேல் பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம்

படேல் பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம்

ஆமதாபாத்: அக். 31-
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “வலிமையான, வளமான தேசத்தை உருவாக்குவதற்காக சர்தார் வல்லபாய் படேல் தனது வாழ்வையே அர்ப்பணித்தார். பாரத மாதாவுக்கு அவர் ஆற்றிய சேவையில் வெளிப்பட்ட தியாகமும் அர்ப்பணிப்பும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான பெரும் ஊக்கமூட்டும் சக்தியாகத் திகழ்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில், “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நவீன இந்தியாவின் முதன்மைச் சிற்பிகளில் ஒருவராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. நாட்டை ஒன்றிணைப்பதில் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றினார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாள் ‘தேசிய ஒற்றுமை தினமாக’க் கொண்டாடப்படுவதாகவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் மக்கள் அனைவரும் தங்களை அர்ப்பணித்துக்கொள்வார்கள் என நம்புவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி சிபிஆர் வெளியிட்ட செய்தியில், தேசக் கட்டமைப்பில் சர்தார் படேல் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நாடு நன்றியுடன் நினைவுகூர்வதாகவும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றப் பயணத்துக்கு அது தொடர்ந்து வழிகாட்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக கவர்னர் அர்லேக்கர் வெளியிட்ட அறிக்கையில், பர்தோலி விவசாயிகளின் நலனுக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் அவர் ‘சர்தார்’ என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். காந்தியுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர், விடுதலைக்குப் பிறகு காந்தியின் வேண்டுகோளின்படி பிரதமர் பதவியை நேருவுக்கு விட்டுக்கொடுத்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான படேல், 565 சமஸ்தானங்களை ஒன்றிணைத்தார். இந்திய நிர்வாகப் பணிகளை அறிமுகப்படுத்திய அவரை அக்டோபர் 31-ம் தேதி போற்றி வணங்குவோம் என்றும் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.