
ராஞ்சி: ஆக. 11-
மாணவர்கள் போராட்டத்தின் போது ராஞ்சியில் போலீசார் தடிையடி நடத்திய சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்த ஜார்க்கண்ட் மாநில பந்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை இந்த பந்த் தொடரும் என்று உள்ளூர் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவசிய சேவைகளுக்கு பந்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பந்தின் காரணமாக கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். போலீசாரின் தடியடியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மாநில அரசுக்கு எதிராக தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.
ஜார்க்கண்ட் சட்டமன்றம் அருகே வேலைவாய்ப்பு வேண்டி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே காரசாரமான மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான போராட்டக்காரர்களும், 4 போலீசாரும் காயமடைந்தனர். சட்டமன்றத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பல தடுப்புகளை (பேரிகேட்) மீறி போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதால், அவர்களைக் கலைக்க போலீசார் தண்ணீரைப் பீச்சியடித்தும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

ராஞ்சியில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் ஆளும் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முக்கிய அரசியல் மோதல் பிளவாக மாறியுள்ளது.
இன்று ஏபிவிபி சார்பில் மாணவர்கள் பேரணி
ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அறிவித்துள்ளது. இன்று டிங்கோனியாவின் பழைய சட்டமன்ற மைதானத்திலிருந்து புதிய சட்டமன்றக் கட்டிடம் வரை மாணவர்கள் பேரணி நடத்த ஏபிவிபி திட்டமிட்டுள்ளது.
போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட பல போராட்டக்காரர்கள் காயமடைந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் கல்வீச்சு நடத்தியதில் 4 போலீசார் காயமடைந்ததாக ராஞ்சி நகர எஸ்.பி. பரஸ் ராணா தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் இருந்த தேவேந்திரா உடல்நிலை சீர்கேடு:
இதனிடையே, ஜார்க்கண்ட் பணி நியமனத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றொருபுறம், சூழ்நிலையை நிதானத்துடனும், உணர்வுப்பூர்வமாகவும், முழுப் பொறுப்புடனும் கையாண்ட போலீசாருக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாணவர்களை உத்தேசித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “உங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் குரல் எழுப்பியுள்ளீர்கள். ஜனநாயகத்தில் உங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவது உங்களது உரிமை, உங்களது குரலுக்கு மதிப்பளிப்பது அரசின் கடமை. தேர்வு முறையை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், தொழில்நுட்ப அடிப்படையிலும், பாதுகாப்பாகவும், பொறுப்புக்கூறல் கொண்டதாகவும் மாற்ற நாங்கள் விரும்புகிறோம். இந்த மாற்றத்தில் உங்களது பங்கேற்பு மிகவும் முக்கியமானது” என்று கூறியுள்ளார்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த 15 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜேபிஎஸ்சி மற்றும் ஜேஎஸ்எஸ்சி தேர்வுகளில் வேலைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு இந்த விவகாரத்தில் கால தாமதம் மட்டுமே செய்து வருகிறது என்று மராண்டி கூறியுள்ளார். பல நியமனத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தின் பணி நியமன முறையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் ஜேபிஎஸ்சி தலைவர் கியாங்டே கைது
ஜேபிஎஸ்சி மற்றும் ஜேஎஸ்எஸ்சி பணி நியமனத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் ஜேபிஎஸ்சி தலைவர் எல். கியாங்டேவை ஜார்க்கண்ட் சிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முறைகேடுகளில் அவருக்குத் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சிஐடி அதிகாரிகள் அவரிடம் பலமுறை விசாரணை நடத்தியிருந்தனர்.
ராஞ்சியில் ஜேபிஎஸ்சி-ஜேஎஸ்எஸ்சி தேர்வர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிரடி கைது நடவடிக்கை நடந்துள்ளது. நியமனத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிஐடி கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் மனோஜ் கௌசிக், கியாங்டேவின் கைதை உறுதிப்படுத்தியுள்ளார்.
முறைகேடுகள் விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை (இ.டி)
ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 14-வது முதன்மைத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணையில் அமலாக்கத்துறையும் (இ.டி) களமிறங்கியுள்ளது. சிஐடி பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையில், இ.டி கடந்த வாரம் வழக்கைப் (ECIR) பதிவு செய்துள்ளது.
மாணவர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?
தேர்வர்களின் முக்கிய கோரிக்கைகள்: ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மாநிலத்தின் பணி நியமன முறையில் ஒட்டுமொத்த சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.














