Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

பெங்களூரில் நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

பெங்களூரு: ஆக. 11- பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர மற்றும் சொகுசு ஹோட்டல் சமையலறைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதும், காலாவதியான கறி மற்றும் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
நீண்ட நாட்களுக்கு முன்பே காலாவதியான இறைச்சிப் பொட்டலங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் கிடங்குகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சைவ மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்படாமல் ஒன்றாகவே வைக்கப்பட்டிருந்தன. முறையான குளிர்பதன வெப்பநிலையும் பராமரிக்கப்படவில்லை.
இந்த சோதனைக் குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில், “-18°சி கடும் குளிர் வெப்பநிலையில் வைக்கப்படும் இறக்குமதி இறைச்சிகள் ஒரு வருடம் வரை கெடாது. ஆனால், உள்ளூர் விதிகளை வைத்து அதிகாரிகள் அவற்றை ‘காலாவதியானது’ என தவறாகக் கூறுகின்றனர். ஊழியர்களுக்குப் போதிய பயிற்சி இல்லாததும், கழிவுகளை அகற்ற நிர்வாக அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமுமே இதற்குக் காரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை திடீர் சோதனை நடத்தி அபராதம் விதிப்பதை விட்டுவிட்டு, உணவக ஊழியர்களுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சார்பில் உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.