
சிமோகா: ஆக. 11-
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள இருவேறு பள்ளிகளில் படித்து வந்த இரு மாணவர்கள், வகுப்பறையிலேயே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பத்ராவதி தாலுகா மாசேனஹள்ளியில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளியில், 8-ம் வகுப்பு படித்து வந்தவர் அக்ஷரா. இவர் நேற்று முன்தினம் வகுப்பறையில் இருந்தபோதே திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே அக்ஷரா பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக வாந்தி, பேதியால் அவதிப்பட்டு வந்த அந்த மாணவி, திடீரென சுருண்டு விழுந்து இறந்தது குறித்து நியூடவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில், சிமோகா தாலுகா தம்மடிஹள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த வினய் (வயது 15) என்ற மாணவன், சக மாணவர்கள் செஸ் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வினய் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மெக்கான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே வினய் பரிதாபமாக உயிரிழந்தார். நன்றாக இருந்த மகன் திடீரென சுருண்டு விழுந்து இறந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. மாணவனின் திடீர் சாபத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து, கும்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியிலேயே இரு வேறு சம்பவங்களில் 2 மாணவர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.













