
சென்னை: ஜூன் 25-
தமிழக அரசியலில் கட்சி தாவல்கள் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் சூழலில், தற்போது மேலும் 3 முக்கிய முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுவது அதிமுகவினரை வேதனையடையச் செய்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், இந்நாள் அல்லது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், இன்னும் சில முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக வரும் ஜூன் 29-ஆம் தேதி சென்னை பனையூரில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்தப்படலாம் என்ற பேச்சும் தவெக வட்டாரங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் அதிருப்தி அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி குறிப்பாக, கட்சியின் எதிர்காலம், எடப்பாடி பழனிசாமியின் தனி ஆவர்த்தனம் மற்றும் கட்சி ரீதியான மாற்றங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சியை மேலும் வலுப்படுத்த முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர். இதனால், அதிமுகவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைமை நிர்வாகிகளிடையே கட்சி தாவும் எண்ணம் உருவாகியுள்ளது.இந்த நிலையில், முன்னாள் அமைச்சரான சி. விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணைய உள்ளார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பது இந்த ஊகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அதேபோல், கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பெயரும் தற்போது அடிபடுகிறது. அவரும் விரைவில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையும் முடிவை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.


















