Home பக்தி திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி, ஆகஸ்ட் 31: புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அரோகரா முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் கொடியேற்றத்தை தரிசனம் செய்தனர்.
ஆவணி திருவிழா பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செப்டம்பர் 9 அன்று நடக்கவுள்ளது. இன்றைய நிகழ்வில் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் மற்றும் உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.15 மணியளவில் திருவிழா கொடியேற்றப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சியாக, மாலை அப்பா் சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருள, வீதிகளில் உழவாரப் பணி மற்றும் இரவு ஸ்ரீபெலி நாயகரும், அஸ்திர தேவரும் பல்லக்கில் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறுகின்றன.
செப்டம்பர் 4 அன்று இரவு 7.30 மணிக்கு மேலக் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை, சுவாமி மற்றும் அம்மன் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருகின்றனர். செப்டம்பர் 5 அன்று காலை கோ ரதம், இரவு வெள்ளி ரதம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செப்டம்பர் 6 அன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப் பெருமான் உருகு சட்டசேவை, 9 மணிக்கு பிள்ளையன் கட்டளை மண்டபத்தைச் சேருதல், மாலை 4 மணிக்கு சிவப்பு சாத்தியில் தங்கச் சப்பரத்தில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செப்டம்பர் 7 அன்று காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் தேரோட்டம், நண்பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. செப்டம்பர் 9 அன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது.