
சென்னை, நவ. 29- திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை:
சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில், நேற்று (நவம்பர் 28) மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் இன்று (நவம்பர் 29) முதல் டிசம்பர் 15ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்கோவில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் தீபமேற்றி சட்டம்-ஒழுங்கைப் பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.













