
மதுரை: நவ. 25-
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், தர்காவும் தீபத்தூணும் குறைந்த இடைவெளியில் இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் தெரிவித்து, அந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீப தினத்தன்று தீபம் ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு வரவில்லை.
இதனால் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாமல், திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆகம விதிப்படியே தீபம் ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு கூடியதும், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் ராமரவிகுமார் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மீறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்காகப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு, மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.













