Home மாவட்டங்கள் சென்னை தீபாவளி பலகாரம் விதிமீறல்: நடவடிக்கை

தீபாவளி பலகாரம் விதிமீறல்: நடவடிக்கை

சென்னை, அக். 31-
சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து உணவு வணிகர்களும், உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிய உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயமாகும். இதற்கான நடைமுறைகளைப் பின்பற்றிய பிறகே பலகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பலகாரக் கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் ஆர்டரின் பேரில் பலகாரம் தயாரிப்பவர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்த பிறகே விற்பனையைத் தொடங்க வேண்டும். உரிய பதிவு அல்லது உரிமம் பெறாமல் செயல்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை செய்யப்படும் இனிப்பு பெட்டிகள் மற்றும் பொட்டலங்களில் பலகாரம் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி காலம், உணவுப் பாதுகாப்புத் துறை பதிவு எண், சைவம் அல்லது அசைவம் என்பதைக் குறிக்கும் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், கிருமித் தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மட்டுமே பலகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். பலகாரங்களில் உணவுப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கார வகைகளில் கார்மோசின், எரித்ரோசின், பாஸ்ட் கிரீன், மெட்டானில் எல்லோ, ஆரஞ்சு ஆர்.என்., ரோடமைன் பி, டார்ட்ராசின் ஆகிய 7 வகையான செயற்கை வண்ணங்களைச் சேர்க்கக் கூடாது. இனிப்பு வகைகளில் ஆரஞ்சு ஆர்.என்., மெட்டானில் எல்லோ, ரோடமைன் பி ஆகிய வண்ணங்களையும் பயன்படுத்த அனுமதி இல்லை. பால் இனிப்புகளுக்கு 3 முதல் 5 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் உள்ளது. எனவே, அவற்றை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் பிற இனிப்புகளுடன் ஒரே பரிசுப் பெட்டியில் சேர்த்து விற்பனை செய்யக் கூடாது.இது தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், foodsafety.tn.gov.in இணையதளம் அல்லது உணவுப் பாதுகாப்பு நுகர்வோர் செயலி வழியாகவும் பொதுமக்கள் பதிவு செய்யலாம்.