Home மாவட்டங்கள் சென்னை துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி: ஆளுநர்

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி: ஆளுநர்

சென்னை, நவ. 27-
தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் நீண்ட காலமாக காலியாக உள்ள நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார். சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதுடன்,
இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பதால், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அன்றாட நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் ஆளுநர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் இல்லாத நிலையில், அரசால் அமைக்கப்பட்டுள்ள துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழுவால் நிர்வாக முடிவுகளைச் சரியாக எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு முழுநேர துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை நடத்த கால அட்டவணை தயாரிக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதி, யுஜிசி தலைவரின் பிரதிநிதி, அரசு பிரதிநிதி என நான்கு பேர் இடம்பெறலாம் என்றும், அவர்கள் தலைசிறந்த கல்வியாளர்களாகவும் நிபுணர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.