
வாஷிங்டன், நவ. 27-
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனைப் புனரமைக்கும் நிதிக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ரூ.2,775 கோடி நன்கொடை வந்தது குறித்து, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் விளக்கம் அளிக்க மறுத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பராமரிப்பதற்காக, தனியாரிடமிருந்து நன்கொடைகளைப் பெற அமெரிக்க அரசு, ‘என்.பி.எஸ்.’ எனப்படும் தேசிய பூங்கா சேவை கணக்கை வைத்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற பிறகு, வாஷிங்டனைப் பிரமாண்டமாக மாற்றியமைக்கும் தனது கனவுத் திட்டங்களுக்கு நிதியளிக்க இந்தக் கணக்கைப் பயன்படுத்தத் தொடங்கினார். இதையடுத்து, அந்தக் கணக்கு ‘வாஷிங்டன் புனரமைப்பு நிதி’ எனக் குறிப்பிடப்படுகிறது.நாடு முழுவதும் உள்ள தேசியப் பூங்காக்களுக்காக ஆண்டுதோறும் ரூ.925 கோடிக்கும் குறைவாகவே நன்கொடை வசூலாகி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் அந்தக் கணக்கில் ரூ.3,395 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2,775 கோடி யார் வழங்கியது என்பது குறித்த விவரங்கள் இல்லை. டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, கடந்த ஓராண்டில் இந்தக் கணக்கில் மொத்தம் ரூ.7,308 கோடி சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் வழக்கறிஞர் டோனி ஐரிஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வளவு அதிகமான நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நன்கொடையாளர்கள் அரசிடமிருந்து குறிப்பிட்ட சலுகைகளை எதிர்பார்க்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிதி தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், நன்கொடையாளர்கள் குறித்த தகவல்களை வழங்க வெள்ளை மாளிகையும், உள்துறை அமைச்சகமும் மறுத்துவிட்டன. ஆப்பிள், என்விடியா, கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவை டிரம்ப் அரசின் முக்கியத் திட்டங்களுக்கு முக்கிய நன்கொடையாளர்களாக இருப்பதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
















