Home மாவட்டங்கள் பெங்களூர் நடிகர் சித்தார்த் காட்டில் சடலமாக மீட்பு:கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை

நடிகர் சித்தார்த் காட்டில் சடலமாக மீட்பு:கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை

பீதர்: ஜூன் 16-
கன்னட சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை ரியாலிட்டி ஷோவான ‘மஜாபாரதா’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் சித்தார்த் பரசனூர் (வயது 36). இவர் ஹும்னாபாத் நகரின் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தார்.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டை விட்டு வெளியில் சென்ற சித்தார்த், அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், ஹும்னாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சித்தார்த்தின் மொபைல் போன் சிக்னலை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று ஹும்னாபாத் தாலுகாவில் உள்ள ஹணகுணி என்ற இடத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சித்தார்த் பரசனூர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பிரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சித்தார்த்தின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. அவரது உடலின் நிலையைப் பார்த்த உள்ளூர் மக்கள், இது இயற்கையான மரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும், மின்சாரம் தாக்கியதால் அவர் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது கொலையா? தற்கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணமடைந்த சித்தார்த் பரசனூர், சின்னத்திரை தொடர்கள் மட்டுமின்றி கன்னட திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.