Home தலைப்பு செய்தி 20 அமைச்சர்கள் பதவி ஏற்பு

20 அமைச்சர்கள் பதவி ஏற்பு

பெங்களூரு: ஆக. 3-
நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடக மாநில அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. காலியாக உள்ள 20 இடங்களையும் நிரப்பி, முழுமையான அளவில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
டெல்லியில் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற மேலிடத் தலைவர்களின் முக்கிய கூட்டத்தில், 20 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு அனுப்பப்பட்டது. பட்டியலைப் பெற்றவுடன் முதல்வர் சிவகுமார், நாகபாவியில் உள்ள அஜ்ஜய்யா மடத்திற்குச் சென்று ஆசி பெற்றார். தொடர்ந்து, ஆளுநருக்குப் பட்டியலை அனுப்பி வைத்துவிட்டு, புதிய அமைச்சர்களுக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்து விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலிடம் ஒப்புதல் அளித்துள்ள 20 பேர் கொண்ட பட்டியலில் புதிய முகங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக அமைச்சர்களாக டி. ரகுமூர்த்தி (செல்லக்கெரே), பசந்தப்பா (மாயகொண்டா), சிவலிங்கேகவுடா (அரசீகெரே), ரிஸ்வான் அர்ஷத் (சிவாஜி நகர்), விஜயானந்த் காஷப்பனவர் (ஹுனுகுந்த்), பாலகிருஷ்ணா (மாகடி), டாக்டர் அஜய் சிங் (ஜேவர்கி), முன்னாள் துணை சபாநாயகர் ருத்ரப்பா லமாணி, மேலவை உறுப்பினர் காயத்ரி சாந்தேகவுடா ஆகியோர் பதவி ஏற்கின்றனர். சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லக்ஷ்மண் சவதிக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களான சிவராஜ் தங்கடகி, சந்தோஷ் லாட், ஜமீர் அகமது கான், மது பங்காரப்பா, மாங்காள் வைத்யா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுபவம் வாய்ந்த பசுவராஜராயரெட்டி, புட்டரங்கஷெட்டி ஆகியோரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.