Home மாவட்டங்கள் சென்னை நள்ளிரவு பைக் ரேஸ்: மேம்பாலத்தில் இருந்து விழுந்த இளைஞர் பலி

நள்ளிரவு பைக் ரேஸ்: மேம்பாலத்தில் இருந்து விழுந்த இளைஞர் பலி

சென்னை, அக். 5- சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் சுமார் 100 இளைஞர்கள் சாரை சாரையாக பைக்குகளில் சென்று, பல்வேறு இடங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகுகன் (21). பட்டதாரியான இவர், தனது சகோதரர் நடத்தி வரும் பைக் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.15 மணியளவில் ஸ்ரீகுகன் தனது நண்பரின் பைக்கில் கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலையில் உள்ள காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கிழக்குப் பகுதி இறக்கத்தில் சென்றுகொண்டிருந்தார். சென்னை ஐ.ஐ.டி. அவுட் கேட் எதிர்புறத்தில் சென்றபோது, அவர் மேம்பாலத்தின் தடுப்புக் கம்பியில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதிய வேகத்தில் ஸ்ரீகுகன் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பைக் ரேஸில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இதன் உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.