Home மாவட்டங்கள் சென்னை நாதக கார்த்திகா உட்பட 9 பேர் விடுவிப்பு

நாதக கார்த்திகா உட்பட 9 பேர் விடுவிப்பு

கோவை, அக். 23-
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேர் கோவை மத்திய சிறையிலிருந்து இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியிருந்தது.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் அக். 4-ஆம் தேதி வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீராச்சிமங்கலம் பகுதிக்கு வருவதற்கு முன்பாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தொண்டர்களுடன் வாகனப் பேரணியாக அங்கு வந்தார். பாதுகாப்பு காரணமாக, அங்கு பணியில் இருந்த போலீஸார் அவர்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, நாதகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்குள் முதல்வரின் வாகனம் அந்த வழியாக வரத் தொடங்கிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில், கார்த்திகா தலைமையில் நாதகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாகவும் கார்த்திகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி கோவையில் உள்ள இல்லத்தில் கார்த்திகாவை போலீஸார் கைது செய்தனர். அதிகாலை நேரத்தில் கைது செய்யப்பட்ட அவரை இரவு உடையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் கார்த்திகா உட்பட நாதகவைச் சேர்ந்த 12 பேர் கைது
கார்த்திகாவின் கைதுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், 12 பேரும் ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
நேற்று நடைபெற்ற விசாரணையில், கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு நாதக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.