
பெங்களூர், செப்.6-
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா காவல் எல்லைக்குட்பட்ட தொட்டநாகமங்களா, கேம்பிரிட்ஜ் பள்ளி அருகே நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் முன்பகுதி பார்க்கிங்கில் வாடகைதாரர்கள் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் 5 பைக்குகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மேலும், வீட்டிலிருந்த மின்சார மீட்டரும், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களும் தீயில் கருகின.
அருகருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளுடன் சேர்த்து, சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பைக்கும் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் கடும் சந்தேகம் எழுந்துள்ளது. இது எதிர்பாராமல் நடந்த விபத்தா அல்லது யாரேனும் மர்ம நபர்கள் சதியால் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி வாடகைதாரர்கள் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் பரப்பன அக்ரஹாரா போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான உண்மை காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.













