
மடிக்கேரி, செப்.6-
குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டை டவுன், எம்.ஜி. ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையை ஒட்டி ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இன்று அதிகாலை 2.05 மணி அளவில் கார் ஒன்றில் வந்த 2 முகமூடி ஆசாமிகள் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்தனர். பின்னர், கையோடு கொண்டு வந்த சிறிய இரும்பு கம்பியால் ஏடிஎம் எந்திரத்தின் மேல் மூடியை உடைத்து கழற்றினர்.
தொடர்ந்து ஏடிஎம் எந்திரத்தின் அடுத்த அடுக்கை திறக்க முயன்றபோது, யாரோ வருவது போல் சத்தம் கேட்டதால் பீதியடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயலும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோமவாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.













