Home செய்திகள் தேசிய செய்திகள் நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

புதுடெல்லி: மே 13-
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுதான் இன்றைய முதன்மைச் செய்தி.
பிறருக்கு வேண்டுமானால் இது ஒரு ஃப்ளாஷ் செய்தியாக இருக்கலாம். ஆனால், ‘தொடர்ந்து 3 ஆண்டுகளாக எழுதுகிறேன், எனது கடைசி முயற்சி இது. நிச்சயம் மருத்துவராகிவிடுவேன்’ என்று சொல்லும் மாணவர்களுக்கும், ‘நகை, நிலம் அடகு வைத்தாவது நீட் கோச்சிங்குக்கு கட்டிய கட்டணம் வீணாகாது. நம் வீட்டிலும் ஒரு மருத்துவர் உருவாகிறார்’ என்ற நம்பிக்கையில் இருந்த நடுத்தர வர்க்க பெற்றோருக்கும் இது நிச்சயமாக வெறும் செய்தியல்ல. பேரிடி.
நீட் தேர்வு ரத்து குறித்து கருத்து தெரிவித்த மாணவர்கள் பலரும், மீண்டும் தாங்கள் அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டதாக கூறினர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், “நான் மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளேன். இந்த நேரத்தில் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்கள். தேசிய தேர்வு முகமை எப்படி இவ்வளவு மெத்தனமாக இருக்க முடியும்? மருத்துவர் கனவில் 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. வேறு படிப்பை நாடியிருந்தால் நான் இந்நேரம் கல்லூரியை முடித்திருப்பேன்.
எனது வாழ்நாளின் மிக முக்கியமான ஆண்டுகள், எங்களின் இளமைக் காலம், விளையாட்டு, வேடிக்கைகள் என எல்லாவற்றையும் நீட் தேர்வுக்காக தியாகம் செய்திருக்கிறோம். தேர்வு முடிந்ததே என்று நிம்மதிப் பெருமூச்சை முழுமையாக அனுபவிப்பதற்குள், எங்களின் இயல்பு மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. தேர்வு பயம் தொற்றிக் கொண்டது. கூடவே இனியும் எப்படி என்டிஏ-வை நம்ப முடியும் என்ற அச்சமும் வந்திருக்கிறது” என்றார்.
இன்னொரு பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர், “நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களாகிய நாங்கள் சந்திக்கும் கெடுபிடிகள் பற்றி நீட் கொண்டுவரப்பட்ட இத்தனை ஆண்டுகளில் பலரும் எழுதிவிட்டனர். ஆனால் எதுவுமே மாறவில்லை. கிட்டத்தட்ட ஒரு குற்றவாளியைப் போல்தான் தேர்வு அறைக்குச் செல்லும் முன்னர் சோதிக்கப்படுகிறோம்.
எங்களை அத்தனை கெடுபிடிக்கு உள்ளாக்கும்போது தேசிய தேர்வு முகமையால் வினாத்தாள் கசிவை தடுக்க இயலாதா? இது ஏதோ இந்த முறை நேர்வதல்ல. ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று பல்வேறு செய்திகள் வரத்தான் செய்கின்றன.இது எங்களைப் போன்று கடின உழைப்பைப் போட்டுவிட்டு காத்திருக்கும் மாணவர்களுக்கு நேர்மை பயனற்றது என்ற கருத்தை அல்லவா திணிக்கிறது!” என்றார்.
கோட்டா கோச்சிங் ஃபேக்டரி: நீட் தேர்வுக்கு தீவிரமாகத் தயாராவோர், தயார் செய்ய நிர்பந்திக்கப்படுவோர் செல்லும் இடம்தான் ராஜஸ்தானின் கோட்டா பகுதி. அந்த டவுன் இப்போது போட்டித் தேர்வு பயிற்சிகளின் கூடாரமாகிவிட்டது. நாள் முழுக்க படிப்பு, பயிற்சித் தேர்வுகள், மதிப்பீடுகள், வீட்டிலிருந்து வரும் ‘நல்லா படிச்சிடு’ என்ற நெருக்குதல்கள் என ஒவ்வோர் ஆண்டும் நெருக்கடிகளுக்குள் சிக்கிய பிஞ்சு மனங்களின் நிலை சொல்லி மாளாது.நீட் தேர்வுக்கு அஞ்சி கோட்டாவில் மட்டுமல்ல, பரவலாகவே தற்கொலைகள் நடக்கின்றன. தற்கொலைகளைத் தடுக்க ஃபேன்களைச் சுற்றி கம்பி வலை, கண்காணிப்புக் கேமராக்கள், மொட்டை மாடி செல்ல முடியாதபடி க்ரில்கள் என்று பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, நீட் தேர்வு மாணவர்களை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.“பாஜக ஊழலால் நசுப்படும் எதிர்காலம்”“இந்த ஆண்டும் நீட் வினாத்தாள் கசிந்து முறைகேடுகள் வெளிவந்து, தேர்வு ரத்தாகியிருக்கிறது. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கிறது. நீட் தேர்வே ஒரு மோசடிதான். பழையபடி பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்” என்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “சில தந்தைகள் கடன் வாங்கினார்கள், சில தாய்மார்கள் தங்கள் நகைகளை அடகுவைத்தனர். லட்சக்கணக்கான மாணவர்கள் விடிய விடிய கண்விழித்து உழைத்தனர். எல்லாவற்றிற்கும் பலன், கசிந்த வினாத்தாள்கள், அரசு மெத்தனம், கல்வித்துறையில் நடக்கும் ஊழல். பாஜகவின் ஊழலால் மாணவர்கள் எதிர்காலம் நசுப்படுகிறது” என்று சாடியுள்ளார்.