
தூத்துக்குடி: செப்.15-
பெரிய வகை கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 335.23 மீட்டர் நீளம், 51 மீட்டர் அகலம், 13.5 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட எம்.வி. சி.எம்.ஏ. சி.ஜி.எம். தோரியம் என்ற சரக்கு பெட்டகக் கப்பலை நேற்று முதன்முறையாகக் கையாண்டு, துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரேசிலின் சாண்டோஸ் துறைமுகத்தில் இருந்து சி.எம்.ஏ. சி.ஜி.எம். தோரியம் சரக்கு பெட்டகக் கப்பல், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு நேற்று வந்தது. 335.23 மீட்டர் நீளமும், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட இந்தக் கப்பல், 13 ஆயிரம் டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட பெரிய வகைக் கப்பலாகும்.
டி.இ.யு. என்பது கடல்சார் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அளவீட்டுக் குறியீடாகும். இந்தக் கப்பல் மெத்தனால் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகிய இருவகை எரிபொருட்களிலும் இயங்கும் திறன் கொண்டது. துறைமுகத்துக்கு வந்த கப்பலை, வ.உ.சி. துறைமுக ஆணையத் துணைத் தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன், துறைமுக அதிகாரிகள் மற்றும் சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தக் கப்பலில் இருந்து மொத்தம் 3,276 டி.இ.யு. சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட உள்ளன. இதில் 1,324 டி.இ.யு. இறக்குமதி சரக்குகளும், 1,952 டி.இ.யு. ஏற்றுமதி சரக்குகளும் அடங்கும். வ.உ.சி. துறைமுகத்தில் இதுவரை கையாளப்பட்ட சரக்கு பெட்டகக் கப்பல்களிலேயே இதுவே மிக நீளமானதாகும்.















