Home செய்திகள் உலக செய்திகள் நேபாள வெள்ளத்தில் 78 தமிழர்கள் மாயம்

நேபாள வெள்ளத்தில் 78 தமிழர்கள் மாயம்

காத்மாண்டு: செப். 12 –
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் காணாமல் போன 85 தமிழர்களில் 78 பேரின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள இமயமலைத் தொடரில், கடந்த மாதம் 26ம் தேதி பனிப்பாறை ஒன்று திடீரென உடைந்து அருகிலிருந்த நதியில் விழுந்தது. இதையடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 1,500 பேர் பலியாகினர். மேலும், 5,600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 17 நாட்கள் கடந்துள்ளன. சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் செயல்படும் ஒரு நிறுவனம் மூலம் கடந்த மாதம் நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 49 பேரின் குடும்பத்தினர், காணாமல் போனவர்கள் தொடர்பாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, நேபாளத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையாக, காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களில் உள்ள மூன்று ஆய்வகங்கள் மூலம் இந்த மாதிரிகள் பெறப்படுகின்றன.
காணாமல் போனவர்களில் நான்கு பேரின் நெருங்கிய உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், டிஎன்ஏ பரிசோதனைக்காக அவர்களிடமிருந்தும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரோம்பேட்டையில் வெளிநாட்டு பயண ஏற்பாட்டு நிறுவனத்தை நடத்தி வரும் மாரவேலின் 28 வயது மகன் சத்ய நாராயணனும் அந்த 48 பேருடன் நேபாளப் பயணம் சென்றிருந்தார்.
இதுகுறித்து மாரவேல் கூறியதாவது: “ரத்த மாதிரிகள் வழங்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான டிஎன்ஏ விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக என்னிடம் கூறப்பட்டது. என் குடும்பத்தினர் நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறோம்.
“நாங்கள் ஒரு ஜோதிடரை அணுகினோம். என் மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவான் என்றும் அவர் கூறினார். மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் காத்மாண்டுவுக்குச் சென்றுள்ளனர்.”பேரிடர் நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகும் இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் இருந்து மக்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகள், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளன.