Home செய்திகள் தேசிய செய்திகள் நேபாள வெள்ளப்பாதிப்பு: உயிரிழப்புகள் அதிகரிப்பு

நேபாள வெள்ளப்பாதிப்பு: உயிரிழப்புகள் அதிகரிப்பு

காத்மாண்டு: செப். 4-
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி 9-வது நாளாக நீடிக்கிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,216 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மத்தியில் வெளிநாட்டினரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு மீட்புக்குழுக்கள் அவர்களின் தேடுதல்களை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. நேபாள காவல்துறையின் தகவலின்படி, சித்வானில் 355, கிழக்கு நவல்பராசியில் 218, மேற்கு நவல்பராசியில் 208 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், 18 உடல்கள் இந்தியாவில் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுவாகோட், ரசுவா, கோர்க்கா, தாதிங், தனாஹு ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளனர். சீன எல்லையான கியிரோங்கில் 21 பேர் உயிரிழந்ததுடன், 541 பேர் மாயமாகியுள்ளனர்.
நேபாள ராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ரசுவா, நுவாகோட் பகுதிகளின் நிலைமாற்றம் காரணமாக ஹெலிகாப்டர் விமானிகள் தங்கள் அனுபவத்தை நம்பியே பறக்கின்றனர். போடேகோசி, திரிசூலி ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், காத்மாண்டு, சித்வான், கோர்க்கா, முஸ்தாங் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான வெள்ள அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளது.