Home மாவட்டங்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: அக். 5-
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு கட்ட எதிர்ப்புத் தெரிவித்து கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்எஸ் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், புதிய தலைமைச் செயலகம் கட்ட கடந்த ஆட்சியிலேயே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கட்ட முடியவில்லை. இந்நிலையில், 100 ஆண்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் சென்னையில் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வா் விஜய் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தாா்.
இதைத்தொடர்ந்து, சென்னையைச் சுற்றிலும் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தீா்மானம் நிறைவேற்றி, திட்டம் தொடங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதற்கு திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வீணடிக்கப்படும் பணம் அந்த மனுவில், அரசுப் பணம் வீணடிக்கப்படுவதாகவும், புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது, கடலோரப் பகுதியில் கட்டுவதற்கான அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சில கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
அரசுப் பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது என்றும், புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என ஆணையிட நீதிமன்றத்துக்கு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2011 இல் இதுபோன்ற வழக்குத் தொடரப்பட்டதாகவும், அப்போது அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். மேலும், இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காக தொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் மனு திரும்பப் பெற்றதையடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.