Home மாவட்டங்கள் சென்னை பயிர்க்கடன் வசூலுக்கு தற்காலிகத் தடை

பயிர்க்கடன் வசூலுக்கு தற்காலிகத் தடை

சென்னை, அக். 3-
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள நிலுவையிலான பயிர்க்கடன்களை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை அனைத்து கூட்டுறவு சங்கங்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இருப்பினும், சில விவசாயிகளிடம் இருந்து, நிலுவையில் உள்ள தங்களது பயிர்க்கடன்களை தொலைபேசி வாயிலாக வசூலிக்க முயற்சிகள் நடைபெறுவதாக புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன. எனவே, அனைத்து விவசாயிகளும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள நிலுவையிலான பயிர்க்கடன்களை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலுவையிலுள்ள பயிர்க்கடன் வசூல் தொடர்பாக கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த எவரேனும் விவசாயிகளைத் தொடர்புகொண்டால், அந்த நபர் தொடர்புகொண்ட கைபேசி எண் மற்றும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் விவரங்களைத் தெரிவித்து புகார் அளிக்கலாம். கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான 98840 00845 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார்களைப் பதிவு செய்யலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.