
ஜெய்ப்பூர், மே 1- ஐபிஎல் தொடரில் இன்று பலம்மிகுந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய்மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பலம்வாய்ந்த அந்த அணியை வீழ்த்திய உற்சாகத்தில் ராஜஸ்தான் களமிறங்குகிறது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 222 ரன்கள் குவித்தபோதிலும், ராஜஸ்தான் அணி, அந்த இலக்கை வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்தது. ராஜஸ்தான் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், டோனவன் பெரைரா, ஷுபம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் சீரான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனவே, டெல்லி அணிக்கெதிரான போட்டியில் இவர்களிடமிருந்து மேலும் ஓர் அபாரமான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். அதேபோல் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா, யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு ஜோப்ரா ஆர்ச்சர் தலைமையிலான பந்துவீச்சுக் குழு நிச்சயம் அழுத்தம் கொடுக்கும் என்று நம்பலாம். அதேநேரத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற ஹைதராபாத், பஞ்சாப், பெங்களூரு அணிக்கெதிரான போட்டிகளில் அந்த அணி வரிசையாக தோல்வி கண்டுள்ளது. எனவே, இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு திரும்ப டெல்லி வீரர்கள் தங்களது உயர்மட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பெங்களூரு அணிக்கெதிரான கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 75 ரன்களுக்குச் சுருண்டது.
எனவே, அந்த மோசமான அனுபவத்திலிருந்து வெளியே வருவதற்கு டெல்லி வீரர்கள் முயற்சி செய்யக்கூடும். டேவிட் மில்லர், கே.எல்.ராகுல், நித்திஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அபிஷேக் போரல் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடும்போது அது நிச்சயம் எதிரணிக்கு அழுத்தத்தைத் தரும். அதேபோல் பந்துவீச்சில் கைல் ஜேமிசன், துஷ்மந்தா சமீரா, அக்சர் படேல், டி.நடராஜன் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் தரும் வகையில் பந்துவீச வேண்டுமென ரசிகர்கள் எதிர்ப் பார்க்கின்றனர்.





















