Home மாவட்டங்கள் சென்னை பிரசாதத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்

பிரசாதத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்

சென்னை: செப். 12:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை மற்றும் தரத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர கோயில்களில் பக்தர்களுக்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இக்கோயில்களில் பிரசாதக் கடைகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஏலம் விடப்பட்டு, அவர்களால் விற்பனை செய்யப்பட்டன. பிரசாதங்கள் தரமற்று இருப்பதாகவும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் அடிப்படையில், இனிமேல் கோயில்கள் மூலமே நேரடியாகப் பிரசாதங்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை அறநிலையத்துறை ஆணையர் வினய் வழங்கி உத்தரவிட்டுள்ளார். தற்போது கோயில்களிலேயே பிரசாதங்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கான சட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, பிரசாதங்களின் தயாரிப்புச் செலவு மற்றும் விற்பனை விலையை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. 50 கிராம் லட்டின் தயாரிப்புச் செலவு ரூ.13 ஆகவும், விற்பனை விலை ரூ.20 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராம் தேன்குழலின் தயாரிப்புச் செலவு ரூ.19 ஆகவும், விற்பனை விலை ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராம் அதிரசத்தின் தயாரிப்புச் செலவு ரூ.13 ஆகவும், விற்பனை விலை ரூ.20 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, முறுக்கு, மிளகு வடை, புளியோதரை, சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், அப்பம், தேன் திணைமாவு, அரவணை ஆகிய பிரசாதங்களுக்கான தயாரிப்பு மற்றும் விற்பனை விலைகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன. பிரசாதங்களின் சுவையும் தரமும் மாறாமல் இருக்க, ஆவின் நெய் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரசாதப் பாக்கெட்டுகளில் கோயில் முகவரி, பொருளின் தரம், எடை, விலை, தயாரிப்பு தேதி ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிய கோயில்களில் சமையலறை கட்டமைப்பைப் பராமரிப்பது, தயாரிப்பு அளவுகளை நிர்வகிப்பது தொடர்பாகவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிரசாதத் தயாரிப்புச் செலவு விவரங்களை முறையாகத் தயாரித்து, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.