Home செய்திகள் தேசிய செய்திகள் புகைப்பிடிப்பால் நீரிழிவு நோயாளிகள் உயிருக்குப் பெரும் அபாயம்

புகைப்பிடிப்பால் நீரிழிவு நோயாளிகள் உயிருக்குப் பெரும் அபாயம்

புதுடெல்லி, செப். 5- நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால், அவர்களின் உயிரியிழப்பு அபாயம் 55 சதவீதம் அதிகரிக்கிறது என சர்வதேச மருந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘நீரிழிவு நோய் ஆய்வு மற்றும் மருத்துவ நடைமுறை’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையில் இதனை தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பின் பாதிப்புகளை ஆராய்ந்து, 11.3 லட்சம் பேரை உள்ளடக்கிய 48 ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில், புகைப்பிடிப்பவர்களுக்கு மரண அபாயம் 55 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், 1.3 லட்சம் நீரிழிவு நோயாளிகளை ஆய்வு செய்த மற்றொரு ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு ஒட்டுமொத்த மரண விகிதம் 48 சதவீதமும், இதய நோயால் ஏற்படும் மரண விகிதம் 36 சதவீதமும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இந்த அடிப்படையில், இந்திய நீரிழிவு நிபுணர் டாக்டர் அனூப் மிஸ்ரா உள்பட 13 நாடுகளைச் சேர்ந்த 35 நிபுணர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். புகைப்பிடித்தல், நீரிழிவு நோயாளிகளில் சிறுநீரக பாதிப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, ஆல்புமினூரியா மற்றும் நீரிழிவு காரணமான சிறுநீரக நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஜப்பானில் 2,490 டைப்-2 நீரிழிவு நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தினசரி புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இன்சுலின் எதிர்ப்பு திறனும் அதிகரிப்பதையும், புகைப்பிடிப்பை நிறுத்திய பிறகு அது குறைவதையும் கண்டறியப்பட்டது.
நீரிழிவு சிகிச்சையில் தற்போது புகைப்பிடிப்பதை நிறுத்துவது குறித்த ஆலோசனை பெரும்பாலும் குறுகிய அறிவுரைகளாகவே உள்ளது. எனவே, வழக்கமான புகைப்பிடிப்பை மதிப்பீடு, செயலில் சிகிச்சை, உடல்நலக் கண்காணிப்பு மற்றும் மீண்டும் புகைப்பிடிப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவை நீரிழிவு பராமரிப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.