
பெங்களூரு: அக். 10-
பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தலைமையில் நேற்று இரவு முழுவதும் நகரம் முழுவதும் உள்ள பப், கிளப் மற்றும் உணவகங்களில் போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். சிறுவர்களுக்கு அனுமதி வழங்குவது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து செயல்படுவது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பிரம்மாண்ட சோதனையில் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் மற்றும் மாநகரத்தின் அனைத்து மண்டல துணை ஆணையர்கள் (டிசிபி) உட்பட சுமார் 8,000 போலீஸார் தீவிரமாகப் பங்கேற்றனர். ஆனந்தராவ் வட்டம், கோரமங்கலம் மற்றும் பிரிகேட் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பப், பார்கள் மற்றும் உணவகங்களில் காவல்துறையினர் அங்குலம் அங்குலமாகச் சோதனை நடத்தினர்.
போலீசார் திடீரெனச் சோதனையில் இறங்கியதால், பல பப் மற்றும் கிளப்களின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கு இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பார்ட்டியில் ஈடுபட்டிருந்த ஜோடிகள் காவல்துறையினரின் திடீர் வருகையால் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர். மேலும், பிரிகேட் சாலையில் உள்ள பெண்கள் பப்களிலும் சிறுமிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.
இதனிடையே, பப் சோதனைகளோடு சேர்த்து நகரின் முக்கிய சாலைகளில் நாக்காபந்தி அமைத்து, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க ‘டிரங்க் அண்ட் டிரைவ்’ பரிசோதனைகளும் தீவிரமாக நடத்தப்பட்டன. நகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், விதிகளுக்குப் புறம்பான செயல்களைத் தடுக்கவும் இந்த சிறப்பு நடவடிக்கை தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.













