Home செய்திகள் தேசிய செய்திகள் பேய் பிடித்துள்ளதாகக் கூறி இளம்பெண்ணுடன் திருமணம்

பேய் பிடித்துள்ளதாகக் கூறி இளம்பெண்ணுடன் திருமணம்

திருப்பத்தூர்: மே 4-
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே இளம் பெண்ணுக்கு பேய், பில்லி சூனியம் செய்திருப்பதால் ஆடு கோழிகளை பலி கொடுக்க வேண்டும், கோயிலில் இரண்டு வாரம் தங்கி வைத்தியம் பார்த்து செல்ல வேண்டும் என்று கூறிய போலி சாமியார், அந்த இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மகளை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்த நிலையில் போலி சாமியார் இரண்டாவது மனைவியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு சரண் அடைந்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த உமையப்ப நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கவிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இரண்டாவது பெண் பிள்ளையான காயத்ரி 19 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திடீரென சுயநினைவு இல்லாமல் கை கால் இழந்து பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலோசனை கூறியதை நம்பி பெற்றோர்கள் தனது மகளை ஆலங்காயம் அடுத்த கல்லரப்பட்டி , கோமலேரி கொட்டாய் பகுதியில் வனத்துறையை ஒட்டியுள்ள மகா காளியம்மன் கோவிலில் உள்ள சாமியார் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது உங்களது மகளுக்கு பேய் பில்லி சூனியம் செய்து இருப்பதாகவும், அதற்கு ஆடு கோழி உள்ளிட்ட உயிர்களை பலி கொடுத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும், அதே போல் கோயிலில் இரண்டு வாரம் தங்கி வைத்தியம் பார்த்து செல்ல வேண்டும் என்று போலி சாமியார் சொன்னதை நம்பி மகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோரும் சம்மதித்துள்ளனர். ஆனால் இரண்டு வாரம் ஆகியும் தனது மகளின் உடல்நிலை சரியாகாததால் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று குணப்படுத்தி உள்ளனர்.
பின்னர் நல்ல நிலைக்கு திரும்பிய மகளை கடந்த இரண்டு ஆண்டாக வாணியம்பாடி அருகே உள்ள அர் ரஹ்மான் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வரும் நிலையில் NMH மருத்துவமனையில் பகுதிநேர பயிற்சியும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி பயிற்சி முடித்துவிட்டு மாலை அரசு பேருந்தில் வீட்டிற்கு வருவதாக காயத்ரி பெற்றோரிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் காயத்திரி கூறுகையில் சூனியம் செய்து குடும்பத்தை காலி செய்வதாக மிரட்டியதால் பயந்து போலி சாமியாரிடம் சரணடைந்தேன். அதற்கு பின் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் நினைவில் இல்லை. என்னை போலி சாமியாரிடம் இருந்து மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் இளம் பெண்ணை, பெண்கள் காப்பகத்திற்கும், போலி சாமியார் சுபிரமணியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.