
புதுடெல்லி, ஏப்ரல் 18- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிராகரித்த எதிர்க்கட்சிகளை அவர் கடுமையாகச் சாடினார். மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் செய்த “பாவங்களை மக்கள் தண்டிப்பார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா (நாரி சக்தி வந்தனா அதினியம்) நிறைவேறாத பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், “பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு தடைபட்டுள்ளது என்பதை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பார்த்து வருகிறார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம், எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பை அவமதித்துள்ளன” என்றார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டபோது, காங்கிரஸ் உட்பட பல குடும்ப அடிப்படையிலான கட்சிகள் கொண்டாடியது வேதனையளிப்பதாக அவர் கூறினார். நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பெண்களின் நலனுக்கான ஒரு முன்மொழிவு தோற்கடிக்கப்பட்டபோது, சில கட்சிகள் கைதட்டின,” என்று அவர் விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி, “இன்றைய 21 ஆம் நூற்றாண்டு பெண்கள் எல்லாவற்றையும் கவனித்து வருகிறார்கள். யார் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை மக்கள் தண்டிப்பார்கள்,” என்று எச்சரித்தார்.
இந்த மசோதாவின் நோக்கம் பெண்களை மேம்படுத்துவதே என்றும், இது அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஒரு முயற்சி என்றும் அவர் கூறினார். “இந்த முயற்சி காங்கிரஸாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதும் பெண்கள் இட ஒதுக்கீட்டிற்குத் தடையாக இருந்துள்ளனர்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.



















