
கொல்கத்தா, ஜூன் 2- திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தை அந்த கட்சியின் 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த சூழலில் திரிணமூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதன்படி கொல்கத்தாவில் உள்ள மம்தாவின் வீட்டில் நேற்று மாலை 3 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மொத்தமுள்ள 80 திரிணமூல் எம்எல்ஏக்களில் 60 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மம்தா உட்பட 20 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மம்தா தெரிவித்தார். தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளைக் கண்டித்து திரிணமூல் சார்பில் கடந்த மாதம் 20ம் தேதி கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மம்தா உத்தரவிட்டு இருந்தார். ஆனால் 35 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணமூல் தலைவர்கள் பலர் பாஜகவுக்கு மாறி வருகின்றனர். சிலர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து வருகின்றனர். முறைகேடுகள் காரணமாக மேற்குவங்கத்தின் ஃபால்டா தொகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் திரிணமூல் வேட்பாளராக போட்டியிட்ட ஜஹாங்கீர் கான் கடைசி நேரத்தில் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதேபோல ஏராளமான திரிணமூல் தலைவர்கள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி வருகின்றனர். புதிய முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு சில திரிணமூல் எம்எல்ஏக்கள் பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து உள்ளனர். தற்போது மம்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்திருப்பது திரிணமூல் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. திரிணமூல் எம்பி ககோலி கோஷ் அண்மையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் அவர் நெருக்கமாக உள்ளார்.



















