
பெங்களூர்: அக். 3-
கர்நாடக அரசியலில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. மாநில முதலமைச்சர் சித்தராமையா,டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி, பாஜக தலைவர்கள் அதிரடியாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக வளாகத்திற்குள் அனுமதி இன்றி நுழைந்து, விதிகளை மீறி தர்ணா போராட்டம் நடத்தியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை பெங்களூரு ந்ருபதுங்கா சாலையில் உள்ள மாநில தலைமை காவல் இயக்குநர் அலுவலகத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர். அசோகா, சலவாதி நாராயணசாமி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டாளமே திரண்டு சென்றனர்.
சட்டத்தையும் தேர்தல் விதிகளையும் மதிக்காமல் செயல்பட்ட துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவர் மீதும் பாகுபாடின்றி வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர்கள் சுடச்சுட மனு அளித்தனர்.














