
இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கம் உள்ள நகரம், உலகில் மக்கள் நெருக்கம் உள்ள 4-வது மெட்ரோபாலிட்டன் நகரம் எனப் பெயரெடுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையில் தவிக்கக் கூடிய சூழலை எதிர்கொண்டுள்ளது.மும்பை நகரம் (கிரேட்டர் மும்பை), புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளில் நீர் இருப்பு மிக ஆபத்தான நிலையை எட்டி, 10% மட்டுமே கையிருப்பு இருக்கிறது. அதாவது அடுத்த 40 நாட்களுக்கு மட்டுமே மும்பை மக்களுக்கு குடிநீர் வழங்கத் தேவையான நீர் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது.
ஏற்கெனவே பருவமழை தாமதமாகிய நிலையில், இது மேலும் தொடர்ந்து, வெயிலின் தாக்கமும் அதிகரித்தால், நீர் இருப்பு மேலும் குறையலாம், குடிநீர் ஆதாரத்துக்கு பெரும் பாதிப்பு வரலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அச்சம் தெரிவித்துள்ளது.நீர் நிலைகளில் இருப்பு எவ்வளவு?மும்பைநகருக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது 7 ஏரிகள். தான்சா, விஹார், துளசி, பட்சா, அப்பர் வைத்ராணா, மோடக் சாஹர், மிடில் வைத்ராணா ஆகிய ஏரிகளில் இருந்துதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 4 ஏரிகள் பிரிஹான்மும்பை மாநகராட்சிக்கு (பிஎம்சி) சொந்தமானது, 3 ஏரிகள் மகாராஷ்டிர அரசுக்கு சொந்தமானது.மும்பை, புறநகர் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 2.18 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு நாள்தோறும் 3,950 மில்லியன் லிட்டர் தண்ணீரை பிஎம்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் 7 ஏரிகளில் தற்போது 1,44,918 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே இருப்பு இருக்கிறது. இது தோரயமாக 40 நாட்களுக்கானதுதான்.
பருவமழை தாமதமாகி வருவதால், நிலைமை மோசமாவதை அறிந்த பிஎம்சி, கடந்த 15-ம் தேதி முதல் குடிநீர் வழங்களை 10 சதவீதம் குறைத்துவிட்டது. அதாவது 4,100 மில்லியன் லிட்டர் அளவு வரை குறைத்துவிட்டது.முக்கிய ஏரியான அப்பர் வைத்தராணா ஏரி வறட்சியை நோக்கி நகர்ந்துள்ளது. நீர் இருப்பு 29%, தான்சா ஏரியில் 4.71%. மிடில் வைத்ராணாவில் 10.34%, பட்ஸாவில் 9.24%, விஹார் ஏரியில் 42.11%. துளசி ஏரியில் 23% நீர் இருப்பு மட்டுமே இருக்கிறது.





















