
புதுடெல்லி, அக். 7-
2001-ம் ஆண்டு இதே நாளில் முதல்வராகப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 25 ஆண்டுகாலப் பொது சேவையை நிறைவு செய்ததையொட்டி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் தலைவராக 25 ஆண்டுகள் சேவையாற்றிய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நான் மேற்கொண்ட பயணங்களின்போது, மேம்பட்ட இணைய இணைப்பு, டிஜிட்டல் முன்னேற்றம், விரிவடைந்து வரும் வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் பாரதம் அடைந்துள்ள கண்கூடான மாற்றத்தை கண்டிருக்கிறேன். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் மாபெரும் சாதனையாக, 25 கோடி மக்கள் கடும் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது மனித வரலாறு ஒருபோதும் மறக்க முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். 2047-ம் ஆண்டுக்குள் அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து சேவையாற்றி வருகிறார். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வலிமையை அருளட்டும்.இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.













