Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.500 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் நிறுத்தம்

ரூ.500 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் நிறுத்தம்

மும்பை, நவ. 28-
ஹெச்டிஎஃப்சி வங்கியில், ரூ.500 மற்றும் அதற்குக் குறைவான மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் எஸ்எம்எஸ் அலர்ட் அனுப்பப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தொகை வரம்பின்றி அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் மின்னஞ்சல் அறிவிப்புகள் தொடர்ந்து அனுப்பப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் மின்னணு வங்கிப் பரிவர்த்தனை அலர்ட் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த மாற்றம் கொண்டுவரப்படுவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ரூ.100, ரூ.200, ரூ.400 அல்லது ரூ.500 வரையிலான சிறிய மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு இனி எஸ்எம்எஸ் வராது. அதேவேளையில், ரூ.500-க்கு மேல் மேற்கொள்ளப்படும் அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் வழக்கம்போல் உடனடி எஸ்எம்எஸ் அலர்ட் அனுப்பப்படும். சிறிய தொகை பரிவர்த்தனைகளின் விவரங்களை வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் ஹெச்டிஎஃப்சி மொபைல் பேங்கிங் செயலி மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, ஜனவரி 1 முதல் ரூ.500-க்கு மேற்பட்ட அனைத்து மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் கட்டாயம் உடனடி எஸ்எம்எஸ் அலர்ட் அனுப்ப வேண்டும்.
ரூ.500 மற்றும் அதற்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதா, வேண்டாமா என்பதை அந்தந்த வங்கிகளின் கொள்கை முடிவுக்கு ரிசர்வ் வங்கி விட்டுள்ளது. அதே நேரத்தில், சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் சேவை வழங்கும் வங்கிகள், அதற்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தினசரி நடைபெறும் கோடிக்கணக்கான சிறிய மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான எஸ்எம்எஸ் செலவைக் குறைக்கும் நோக்கில் ஹெச்டிஎஃப்சி இந்த முடிவை எடுத்துள்ளது.