
பெங்களூர்: ஆக. 21-
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி வீரசந்திரா சிக்னல் அருகே, காரில் சட்டவிரோதமாக பணத்தை கடத்திச் செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டபோது, தகுந்த ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி ரொக்கப் பணம் சிக்கியது.
இதனைத் தொடர்ந்து, காரையும் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்தவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தமிழ்நாடு தூத்துக்குடியைச் சேர்ந்த ‘சிந்து ஜூவல்லர்ஸ்’ நகைக்கடை உரிமையாளர் சச்சின் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சச்சினை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, சச்சினின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து ரூ.1.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9 கோடி மற்றும் வீட்டில் சிக்கிய ரூ.1.3 கோடி என மொத்தம் ரூ.10.3 கோடி பணத்திற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணத்தின் பின்னணி என்ன, எதற்காக கடத்தப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.













