Home செய்திகள் தேசிய செய்திகள் லாரன்ஸ் பிஷ்னோய்: தாவூத் பாணியில் கும்பல்?

லாரன்ஸ் பிஷ்னோய்: தாவூத் பாணியில் கும்பல்?

புதுடெல்லி, அக். 25-
மும்பையின் நிழல் உலகை நீண்டகாலம் கட்டுப்படுத்திய தாவூத் இப்ராஹிமின் ‘டி-கம்பெனி’ பாணியில், லாரன்ஸ் பிஷ்னோய் ‘எல்-கம்பெனி’யை உருவாக்க முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையின் ஆரம்பகால தாதாக்களான கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் ஆகியோருக்குப் பிறகு தாவூத் இப்ராஹிம் ஆதிக்கம் செலுத்தினார். 1980 முதல் 1990 வரையிலான காலத்தில் தொழிலதிபர்கள், கட்டுமான நிறுவன உரிமையாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் தாவூத் கும்பலின் மிரட்டல்களை எதிர்கொண்டனர்.
1997-ல் ‘டி-சீரிஸ்’ நிறுவனர் குல்ஷன் குமார் சுட்டுக்கொல்லப்பட்டார். திரைப்படத் தயாரிப்பாளர் முகேஷ் துக்கல் படுகொலை செய்யப்பட்டதுடன், இயக்குநர் ராஜீவ் ராய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி 2000-ல் இயக்குநர் ராகேஷ் ரோஷன் சுடப்பட்டும் உயிர் தப்பினார். மிரட்டிப் பணம் பறித்தல், கூலிப்படை கொலை, நில அபகரிப்பு, திரைப்படத் துறையில் தலையீடு உள்ளிட்ட செயல்களில் டி-கம்பெனி ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. பஞ்சாபில் கல்லூரியில் பயின்ற லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிராருடன் இணைந்து 2012-ல் கும்பலை உருவாக்கினார். கல்லூரித் தேர்தல்கள் மற்றும் உள்ளூர் மோதல்களுக்குப் பின்னர் குற்ற உலகிற்குள் நுழைந்த அவர், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சிறை சென்றார்.
2015 முதல் சிறையில் இருந்தபோதும், பிற குற்றவாளிகள் மற்றும் கும்பல் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கும்பலை விரிவுபடுத்தினார். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர்கள், மதுபான வணிகர்கள், பிரபலங்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. கோல்டி பிரார், காலா ஜதேரி, ரோஹித், அன்மோல் பிஷ்னோய் ஆகியோரின் உதவியுடன் கும்பல் சர்வதேச அமைப்பாக மாறியதாகவும், அமெரிக்கா, கனடா, துபாய் தொடர்பான குற்றங்களில் லாரன்ஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் மூலம் பல கோடிகள் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 2023 முதல் அகமதாபாத் சபர்மதி மத்திய சிறையில் உள்ள லாரன்ஸ், சிறையிலிருந்தபடியே கும்பலை இயக்குவதாகக் கூறப்படுகிறது. சல்மான் கானை குறிவைத்த சம்பவங்கள், ஏப்ரல் 2024-ல் அவரது பாந்த்ரா இல்லம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு, அக்டோபர் 2024-ல் என்சிபி தலைவர் பாபா சித்திக் கொலை, பிப்ரவரி 2026-ல் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இல்லம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் கும்பல் பெயர் இடம்பெற்றது.