
கராச்சி: செப். 4-
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள விநாயகர் கோயிலில், ஒரு முஸ்லிம் ஓவியர் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
1947ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது கராச்சியில் 51.1 சதவீத இந்துக்கள் வசித்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நகரில் தற்போது 1.12 சதவீதம் மட்டுமே இந்துக்கள் உள்ளனர். அங்கு இருந்த 250 இந்து கோயில்களில் தற்போது 50 கோயில்களே உள்ளன.
கராச்சியின் புறநகர் பகுதியான கஸ்தராபாத் நகரில் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலை மராத்தியர்கள் நிர்வகித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விநாயகர் சிலைக்கு புதியதாக வண்ணம் தீட்டப்பட்டது.
கராச்சியை சேர்ந்த பிரபல முஸ்லிம் ஓவியர், விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டினார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.











