Home செய்திகள் தேசிய செய்திகள் விமானத்தில் 3 பேரை கைது செய்த பெண் போலீஸார்

விமானத்தில் 3 பேரை கைது செய்த பெண் போலீஸார்

புதுடெல்லி, அக். 11-
போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தனர். விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமானத்துக்குள் நுழைந்த டெல்லி காவல் துறையின் பெண் போலீஸ் அதிகாரிகள் மூவரையும் கைது செய்தனர். அவர்களைப் பிடிக்க பெண் போலீஸார் அனுப்பப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. விமானத்தின் உள்ளே பயணிகள் நடந்து செல்லும் பாதை குறுகலாக இருப்பதால், ஆண் போலீஸார் சென்றிருந்தால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக டெல்லி போலீஸார் கருதியிருக்கலாம் எனத் தெரிகிறது. அங்கு சிறிய அளவில் மோதல் ஏற்பட்டாலும், அது பெரும் பரபரப்பாக மாறக்கூடும். இதுபோன்ற சூழலைத் தவிர்த்து, பதற்றம் அதிகரிக்காமல் இருக்க பெண் போலீஸாரை அனுப்ப முடிவு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில வாக்குவாதங்கள் ஏற்பட்டபோதிலும், பெரிய அளவிலான குழப்பமின்றி மூவரையும் பெண் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். விமானத்துக்குள் சுமார் 12 பெண் போலீஸ் அதிகாரிகள் மூவரையும் சூழ்ந்து நிற்பது காணொலிகளில் பதிவாகியுள்ளது. போலீஸார் விமானத்துக்குள் நுழைந்தபோது, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த திப்கே தனது செல்போனில் சம்பவத்தைப் பதிவு செய்யத் தொடங்கினார். தாஸ் நடுவிலும், அவருக்கு அருகில் ரங்காவும் அமர்ந்திருந்தனர். போலீஸாரைக் கண்டதும் மூவரும், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டனர். தன்னைக் கைது செய்யும் விதம் குறித்து திப்கே போலீஸாரிடம் கேள்வி எழுப்பினார். “நாடு எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் பாருங்கள். நேரடியாக விமானத்திலிருந்தே எங்களைக் கைது செய்ய வந்திருக்கிறார்கள். இந்திரா காந்திகூட இப்படிச் செய்ததில்லை. இது சர்வாதிகாரம். நான் கைது செய்யப்படுவதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். என்னைக் கைது செய்யுங்கள்” என்று அவர் கூறுவது காணொலியில் பதிவாகியுள்ளது.