
சிவகாசி: அக். 26-
ஆன்லைன் விற்பனை அதிகரிப்பால் சிவகாசியில் உள்ள கடைகளில் பட்டாசு விற்பனை குறைந்துவிட்டதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சிவகாசியில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 3,500-க்கும் அதிகமான பட்டாசு விற்பனை கடைகளும் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே நிரந்தர பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு அதிக தள்ளுபடி, புது ரகப் பட்டாசுகளை நேரடியாக வெடித்து பார்த்து வாங்கலாம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பட்டாசு வாங்குவதற்காக ஏராளமானோர் சிவகாசிக்கு வருவது வழக்கம்.
சிவகாசி பட்டாசு கடைகளில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தில் சிறப்பு பூஜையுடன் பட்டாசு விற்பனை தொடங்கும். அன்றைய தினத்திலிருந்து பெரு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கவும், தொழில்துறையினர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் கிஃப்ட் பாக்ஸ் ரக பட்டாசுகளை ஆர்டர் கொடுக்க தொடங்குவர். இதைத்தொடர்ந்து ஆடிப்பெருக்கு முதல் தீபாவளி வரை சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் விற்பனை மும்முரமாக நடைபெறும். ஆயுத பூஜைக்கு பின்பு சில்லறை விற்பனையும் களைகட்டும்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், தற்போதும் ஆன்லைன் விற்பனை களைகட்டியது. மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்மழை பெய்து வருகிறது.













