Home செய்திகள் தேசிய செய்திகள் வெளிநாட்டு தலைவர்களுக்கு சைவ விருந்து

வெளிநாட்டு தலைவர்களுக்கு சைவ விருந்து

புதுடெல்லி, அக். 25-
வெளிநாட்டு அதிபர்கள் டெல்லிக்கு வரும்போது, பிரதமர் சார்பில் அவர்களுக்கு விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த விருந்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் இருந்தபோது, இந்த விருந்தில் சைவம் மற்றும் அசைவம் என இருவகை உணவுகளும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அசைவ உணவு சாப்பிடுவோரின் தட்டுக்கு முன்பாக ரோஜா ஒன்று வைக்கப்படும். அதை பார்த்து, உணவு பரிமாறும் ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர் அசைவம் சாப்பிடுபவர் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ற உணவை வழங்குவார்கள்.ஆனால், சமீப காலமாக வெளிநாட்டு அதிபர்களுக்கான விருந்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சைவ உணவு சாப்பிடுபவர் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு பதிலளிக்கும் அதிகாரிகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமாக உள்ள சிறப்பு உணவுகளை வெளிநாட்டு விருந்தினர்களுக்கு வழங்குவதோடு, அவற்றை உலக அளவில் பிரபலப்படுத்தும் நோக்கமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.விருந்தில் சிறுதானிய தோசை போன்ற தென்மாநில உணவு வகைகளில் ஒன்று அல்லது இரண்டு இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்பதில்லை. விருந்தை தொடர்ந்து புறக்கணித்து வந்த ராகுல் காந்தி, பின்னர் பிரதமருக்கு கடிதம் எழுதி, வெளிநாட்டு அதிபர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அவருக்கு விருந்துக்கான அழைப்புகள் அனுப்பப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், மல்லிகார்ஜுன கார்கேவும் அந்த விருந்தில் பங்கேற்பதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் இந்திய அரசுக்கு எதிராக ராகுல் விமர்சனம் செய்வதால், இந்தியாவில் வெளிநாட்டு பிரதமர்களை சந்தித்தாலும் அரசுக்கு எதிராகவே பேசுவார் என்ற காரணத்தால் அவருக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.