Home மாவட்டங்கள் சென்னை 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.497.57 கோடி; முந்தைய பட்ஜெட்டை விட 19.48 சதவீதம்...

10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.497.57 கோடி; முந்தைய பட்ஜெட்டை விட 19.48 சதவீதம் குறைவு

சென்னை, செப். 12- தமிழகத்தில் நடைபெறும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களில், 4 திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதுதவிர, இரட்டை பாதை திட்டங்களுக்கும் குறைவான நிதியே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்து வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும், புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதியும் ஒதுக்காதது தெரியவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் நடைபெறும் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களைக் கேட்டுள்ளார்.அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 870.78 கி.மீ. தொலைவுக்கு 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.497.57 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய பட்ஜெட்டை ஒப்பிடுகையில் 19.48 சதவீதம் குறைவாக உள்ளது. பல்வேறு புதிய பாதை திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை (70 கி.மீ.), அத்திப்பட்டு – புத்தூர் (88.30 கி.மீ.), ஈரோடு – பழனி (91.05 கி.மீ.), சென்னை –மாமல்லபுரம் – கடலூர் (179.28 கி.மீ.) ஆகிய புதிய பாதை திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய ரயில் பாதைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.497.57 கோடியில் வெறும் இரண்டு திட்டங்கள் மட்டுமே மொத்த நிதியில் 87.4 சதவீதம் பெற்றுள்ளன. தமிழகத்தில் இரட்டை பாதை மற்றும் கூடுதல் பாதை திட்டங்கள் மிகக்கடுமையான நிதிச்சரிவைச் சந்தித்துள்ளன. 14 இரட்டைப்பாதை, கூடுதல் பாதை திட்டங்களின் (658.34 கி.மீ.) மொத்த மதிப்பீடு ரூ.8,173.35 கோடி. ஆனால், 2026-27-ம் நிதியாண்டில் வெறும் ரூ.324.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.