Home விளையாட்டு 14 பந்துகளில் அரைசதம்: பிரேமா ராவத் உலக சாதனை

14 பந்துகளில் அரைசதம்: பிரேமா ராவத் உலக சாதனை

புனே, நவ. 3-
மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய வீராங்கனை பிரேமா ராவத் புதிய உலக சாதனை படைத்தார். புனேவில் நடைபெற்ற சீனியர் மகளிர் டி20 டிராபி தொடரில் உத்தரகாண்ட்–ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தச் சாதனை நிகழ்ந்தது.உத்தரகாண்ட் அணிக்காக விளையாடிய பிரேமா ராவத், ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 14 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
இதன் மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தினார். அவரது அதிரடி ஆட்டத்தால் உத்தரகாண்ட் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. கடைசி 2.5 ஓவர்களில் ராகவி பிஸ்ட், பிரேமா ராவத் இணைந்து ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் சேர்த்தனர். இதனால் உத்தரகாண்ட் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ராகவி பிஸ்ட் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 188 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, உத்தரகாண்ட் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் உத்தரகாண்ட் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரேமா ராவத் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு, 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா, ஜிம்பாப்வேக்கு எதிரான கராச்சி டி20 சர்வதேசப் போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். அந்த ஆட்டத்தில் அவர் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். அந்தச் சாதனையை பிரேமா ராவத் ஒரு பந்தில் முறியடித்துள்ளார்.